Tuesday, December 15, 2009

காதல் கவிதை..

நான் ஒரு கவிதைப்ப்ரியன்..
சந்தோசம்,சோகம்,கனவு
இப்படி அனைத்தையும்
கவிதையாய் எழுதுவேன் ..
நண்பன் ஒருவன் என்னிடம் கேட்டான்
ஏன் காதலியை மட்டும் எழுதுவதில்லை
என்று..
நான் அவனிடம் கூறினேன் எப்படி
கவிதையை கவிதையாக எழுதுவது என்று ..

கொஞ்சம் சந்தோசமான விஷயம்...

வணக்கம்,
என்னுடைய கவிதை ஒன்று உயிர்ம்மை இணையதளத்தில் வெளியாகி உள்ளது.பின் வரும் முகவரியை கிளிக் செய்து படிக்கலாம்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2317

நன்றி..

Monday, December 7, 2009

அரவணைப்பு..

எறும்பு ஒன்று கனத்து பெருத்து
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...

Tuesday, September 29, 2009

நேற்று இன்று நாளை..

நேற்று,
முந்தா நாள்
ஆனது
இன்று...

நாளைக்கு
இன்று
நேற்று
தான்...

நாளை,
நாளை மறுநாள்
நேற்று,
முந்தா நாள்
இவைகளுக்கிடையில்
சிக்கி தவிக்கிறது
இன்று..

ஒத்திபோடவே
அதிகம்
பயன்படுகிறது
நாளை...

பழசாகிப்போன
நேற்று..
பார்க்கவே முடியாத
நாளை..
இவைகளை நினைத்தே
கடந்து போகின்றது
இன்று..

Thursday, September 3, 2009

அடம்..

என்றும் இல்லாத நாளாய்
இன்று குழந்தை நிறையவே
அடம் பிடித்தது
பள்ளிக்கு செல்ல..
சமாதானம் செய்து கொண்டிருந்த
எனக்கு அந்த வழியே சென்று
கொண்டிருந்த வேறொரு குழந்தை
தன் அப்பாவிடம்..
அந்த குழந்தையின் அப்பா
ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறார் என்று
கேட்பது
எதேச்சையாய் கேட்டது ..

Thursday, July 16, 2009

கடவுளின் குழந்தைகள்..

கும்பகோணத்தில், பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

கடவுளாய் குழந்தைகள் உலகினில்
கடவுளாகவே குழந்தைகள்
குடந்தையில்....

Friday, June 12, 2009

மழை தனிந்த கணம்...

சற்றே
மழை தனிந்த
அந்த ரம்மிய பொழுதை
கவனித்து
பார்த்திருக்கிறீர்களா..
பகலும் அல்லாத
இரவும் அல்லாத
ஒரு பொழுது அது..
பூமியெங்கும் ஒரு மஞ்சள்
போர்வை போர்த்தியிருக்கும்..
பறவைகள் தலை சிலிர்த்தி
பறக்கத் தயாராகும்..
கூரையில் தங்கிய மழைத்துளிகள்
சொட்டு சொட்டாய் தரையைத்தடவி சத்தமிடும்..
மண்ணோடு கலந்த மழைத்துளிகள்
நம் நினைவிற்கே ஒரு வாசம் கொடுக்கும்..
பூமியே அன்று பிறந்த குழந்தை போல்
அப்பழுக்கற்று இருக்கும்..
பார்க்கும் மனிதர்கள் எல்லாம்
நல்லவர்களாக தெரிவார்கள்..
நம் மனம் பசுமையில் நிரம்பியிருக்கும்..
இக்கணம் ஓரிரு மணித்துளிகள்
தான் நீடிக்கும்..
இதுவரை இல்லையெனும் இனிமேலாவது
அனுபவிக்கத்தவறாதீர்கள்...

நல்லா இருக்கா ..

யாரோ ஒரு ஒருவரின்
வரிகளை வாசிக்கையில்,
ஆச்சர்யமளித்தது..
ஓ..
இப்படியும் எழுதலாமா
என்று..
அப்போது எழுதியது தான்
இந்த கவிதை..

Friday, May 22, 2009

இப்படியாய் போகின்றது தருணங்கள்..

இன்று ஏதேனும் எழுத வேண்டுமே...
கவிதை எழுதலாமா...
எதை பற்றி எழுதுவது..
மழை....ம்ம்ம்..
வேண்டாம்..
கடல் அல்லது கரையை பற்றி..
வேண்டாம்..
நிறைய எழுதிட்டோம்..
அம்மாவைப்பற்றி..
இல்லை..
சரி அவளை பற்றி..
என யோசித்து
கடைசியில் ஏதும்
எழுதாமல் போகிறேன்...

Thursday, May 21, 2009

படித்ததில் பிடித்தவை ...

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் இந்த வரிகளை படித்தேன்.. இதை படிக்கிறவர்கள் கண்டிப்பாக தன் அம்மாவை இன்னும் அதிகம் நேசிப்பார்கள்..

மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தேன்.
‘ஏன் குடையை எடுத்துக்கொண்டு செல்லவில்லை?’ என்று அண்ணன்
கேட்டான்.
‘மழை நிற்கும் வரையில் காத்திருந்திருக்கலாமே’ என்று அக்கா சத்தம்
போட்டாள்.
‘சளிபிடித்து சங்கடப்பட்டால்தான் உனக்கெல்லாம் புரியும்’
என்று கோபப்பட்டார் அப்பா.
நனைந்த தலையை துவட்டியபடியே ‘முட்டாள் மழை! பிள்ளை
வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கக் கூடாதோ?’ என்றாள் அம்மா.

Saturday, May 2, 2009

பரிதவிப்பு..

முதல் முறையாய் யோசித்தேன்
என் காலில் அடிபட்டு இறந்துபோன
ஏறும்பிற்காக..
அதுவும் என்னைப்போல் அன்றே பிறந்த
தன குழந்தையை பார்க்கச்சென்றுகொண்டிருக்குமோ
என்று ...

Wednesday, March 18, 2009

ஹைக்கூ வரிசை...

பரிமாறி
பசியாறும்
அம்மா..

புள்ளியில்
ஆரம்பித்து
கோலத்தில்
முடிகிறது..

இலையில் மிச்சம்
வேண்டாம்..
எச்சம் என்பார்கள்..

விழுந்து
காக்கும்
மழை..

அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..

Sunday, March 15, 2009

பேருந்து நிஜங்கள்..

காலையில் தவறவிட்ட
பேருந்திலிருந்து
ஆரம்பமாகிறது
அன்றைய அலுவலக
நெருக்கடிகள்..

நியதி ஒன்றுமில்லை
எழுபவரின்
அருகில் நிற்பதொன்றே
அதிகபட்ச தகுதி
பேருந்து இருக்கையில்
அமர்வதற்கு..

அந்த பேருந்து ஓட்டுனர்
இதுவரை
தன் குழந்தையை
பள்ளிக்கு கொண்டு சென்று
விட்டதில்லையாம்..

அவளின் அவசரம்
அவரின் அலட்சியம்
நெடுஞ்சாலையில்
நில்லாமல் செல்லும் ஓட்டுனர்..

அடிபட்டவனக்கும்
அவன் வண்டிக்கும் இடையில்
புகுந்து செல்கின்றன
வாகனங்கள்..

Friday, March 6, 2009

நெய்தல் நினைவுகள்..

கரையில் கட்டிய
மணல் வீடு தான்
நான் கட்டியதிலேயே
அழகான வீடு..

இதே கடற்கரையில்
நான் உனக்கு அளிக்கும்
பதில்கள்..
என் அப்பா எனக்கு
மறுத்த பதில்கள்..

மணல் வீட்டில்
குழி தோண்டிய போது
முதலாய் அவள்
கை பிடித்தேன்..

சிதிலடைந்த அந்த
பாய்மர படகு
இன்று என்னை எனக்கே
ஞாபகப்படுத்துகிறது..

என் அப்பாவிடம் கைகுழத்தையாய்
இருந்தது முதல்
என் மகனிடம் கைத்தாங்கலாய்
இன்று வரை
இந்த கடற்கரையில்
நான் நடந்து வருகிறேன்..

கரைக்கு
கடல் ஒன்றே
அடையாளம்..

லட்சகணக்கான அடி ஆழமாம்
கடல்
கரையை தாண்டி வருவதில்லை
கடல் இல்லை
கரை தான்
அதிசயம்..

கரையில் ஒதுங்கியிருக்கும்
அந்தபந்து
சிறு வயதில் அடித்து சென்ற
என் நீல நிற பந்தையே
நினைவுபடுத்துகிறது..

Friday, February 27, 2009

ஹைக்கூ கவிதைகள்(2)..

காற்றுக்கு புத்தி இல்லை
கயவர்கள் மூக்கிலும்
நுழைகிறதே..

தலை எழுத்தாய் முகவரி
அஞ்சல் உறையில்..

எடுக்க மறந்ததை
சொல்லி காட்டியது
படர்ந்த தூசி..

உயிர் பெற
புதைகிறது
மண்ணில் விதைகள்..

உருவம் கொடுக்கிறார்
கடவுளுக்கு
சிற்பி..

அறிவைக் கொடுக்கும் புத்தகம்
அமைதியாய் அலமாரிகளில்
நூலகம்..

நிலவின் பிரதி
தெரியவில்லை,
வற்றிய கிணறு..

பாத்திரத்தை தேய்த்து
வயிற்றைக் கழுவும்
வேலைக்காரி..

நொடிகளுக்குள்
மனம் மாறும்
கடிகாரம்..

கப்பல்
கவிழ்த்தால்..
காகிதம்
நனைந்தது..

சின்ன சின்ன பொய்களும் அழகென்பேன்

நான் அழகா இருக்கிறேனா என்று
கேட்கிறாய் நீ..
எனக்கு பொய் சொல்ல தெரியாது என்கிறேன் நான்..
சும்மா சொல்லு என்கிறாய் நீ
உலகத்திலேயே நீ தான் அழகு என்கிறேன் நான் ..
நீயோ வெட்கத்தில் கன்னம் சிவக்கிறாய்...

உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க
என்னை ஏன் தேர்ந்தேடுத்தாய் நீ என கேட்கிறாய் நீ..
வேர் எவரும் கிடைக்காததால் என்கிறேன் நான் ..
ச்சி போடா உனக்கு எப்போவும் வெளையாட்டு தான் என்கிறாய் நீ ..
உண்மை அது தான் என்றாலும்..

என்னை எவ்வளவு பிடிக்கும்
என கேட்கிறாய் நீ..
நானோ அவள் அளவிற்கு என்கிறேன்..
நீயோ அவசரத்தில்
ஏன் அவளை விட என்னை...
என கூற முற்பட்டு
பிறகு யோசித்து என்னை
அடிக்க வருகிறாய்...

என்னை விட அதிகமாக
உனக்கு எது பிடிக்கும்
என கேட்கிறாய் நீ...
நான் உன்னை விட..
என்று யோசிப்பதற்குள்
மாறிவிடுகிறது உன் முகம்..
ஏதும் பிடிக்காது என சமாளிக்கிறேன் நான்..

Wednesday, February 25, 2009

அவளின் அந்தரங்கம் விளம்பரமாக்கபடுகிறது..

வயதை ஒத்த உடம்பின் சில
பரிணாம மாற்றங்கள் இயற்கையாய்
நடந்தே தீரும்..
இதில் ஆச்சர்யபடுவதர்கென்ன..
பெண்ணின் பருவ மாற்றமும் இதில்
ஒன்று தானே..
இதை பத்திரிக்கை அடித்து ஊர் கூட்டி
சந்தோச ஒப்பாரி வைக்கிறார்கள்...
இது என்ன அவளின் திருமண தகுதியின்
முன் அறிவிப்பா..
இல்லை அவள் செய்த சாதனையை விளக்கும்
பொதுக்கூட்டமா..
முன்னோர் வகுத்த பாதையை
பின்பற்றுவது மட்டுமல்ல
சீர் செய்வதும் நம் கடமையே..

Thursday, February 5, 2009

சற்றே வித்தியாசமான பேருந்து அனுபவம்..

எனக்கு சமீபத்தில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட சற்று வித்தியாசமான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்திறேன்.

என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் வீடு வரை செல்ல தேவையான பேருந்து கட்டணத்தில் என்னிடம் சில்லரை ஒரு ரூபாய் குறைவாக இருந்தது.நூறு ரூபாய் நோட்டை நீட்டினால் கண்டக்டரிடம் கன்னடத்தில் வாங்க வேண்டிய வசவை நினைத்து எப்படியாவது இருக்கும் சில்லரை காசை வைத்து சமாளிக்கலாம் என நினைத்து நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தம் வரை என்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன்.இரண்டு நிறுத்தம் தானே சமாளித்து பயணம் செய்து விடலாம் என்ற தைரியம் தான்.

பயணத்தின் போதே என் மனதில் நிறைய யோசனைகள்,எந்த மாதிரி நான் மாட்டிக்கொள்ள இயலும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது.இதில் இரண்டு விதமான நிகழ்வுகள் நிகழ வாய்ப்புண்டு என்று நினைத்தேன்.ஒன்று நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் எந்த பிரச்சனையுமின்றி இறங்கி விடுதல்.பேருந்தில் அதிகம் கூட்டம் இருந்ததால் இவ்வாறு தான் நடக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.சரி வேறு எந்த மாதிரி நடக்கும் ஒரு வேளை நான் கொடுத்த கட்டணத்திற்கு இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி பயணிக்கும் போது கண்டக்டர் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது.அய்யயோ ஏதும் தெரியாதது போல் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டிடுச்சா என அப்பாவியாய் கேட்டு,கண்டக்டரை பொறுத்த வரை ஒரு நிறுத்தம் தாண்டி என்னை பொறுத்த வரை சரியான நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் என நினைத்தேன்.

இந்த இரு மாதிரியான நிகழ்வுகளை தவிர வேறு மாதிரி நிகழ வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன்.நீங்களும் நன்கு யோசியுங்கள் வேறு எந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறது, எனக்கு நடந்ததே.. நான் கொடுத்த கட்டணத்திற்கு உரிய நிறுத்தம் வந்ததும் என் அருகில் இருந்தவர் (ரொம்ப நல்லவர் .. வடிவேலு பாணியில் உச்சரிக்கவும்) சார் நீங்க எறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு என்று கண்டக்டர் காது பட கூறினார் அத்தோடு நிறுத்திகொள்ளாமல் இதை தாண்டுன நீங்க ஒன்றை கிலோ மீட்டர் பின்னாடி நடந்து வரணும் என்று வேறு கூறினார்.கண்டக்டர் அருகில் இல்லை என்றாலும் சமாளித்து விடலாம் அவர் என் அருகிலேயே நின்றிருந்தார்,வேறு என்ன செய்வது என்னை நானே நொந்த படியே பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கு உதவி செய்த பெருமிதத்தில் அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்....

Wednesday, February 4, 2009

பெண்ணியம்...

பொதுவாகவே பிரபலமானவர்களை பார்க்க பெரும்பாலானோர் ஆசைப்படுவதுண்டு அல்லது தான் விரும்பும் துறையில் அனுபவமிக்கவரை பார்க்க ஆசைப்படுவதுண்டு.அந்த வகையில் எனக்கு பத்திரிகை ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை சென்ற வாரம் என்னுடைய அண்ணனின் தயவினால் நிறைவேறியது.அவர் பெயர் ஜவஹர்,சென்னை திருவான்மியூரில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தோம்.தமிழர் கண்ணோட்டம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

அறிமுக படலத்திற்கு பிறகு எங்கள் பேச்சு பெண் சுதந்திரத்தை பற்றியும்,பெண்கள் மீதான அடக்கு முறை பற்றியும் சென்றது.அங்கு நடந்த விவாதங்கள் பெண்ணியத்தை பற்றி நிறைய யோசிக்க வைத்தது .

இந்த உலகில் பெண் அடக்கு முறை ஏன் தோன்றியது,எப்போது தோன்றியது என்ற கேள்வி தான் எனக்குள் முதலில் எழுந்தது.இந்த அடக்கு முறை தோன்ற மூலக்காரணமாய் எது இருந்திருக்கும்,இயற்கையிலேயே ஆண் பெண்ணை விட பலசாலியாய் இருப்பதினாலா அல்லது பெண்களுக்கு இருக்கும் சில உடல் ரீதியான காரணத்திற்காகவா.

நம் சமூகத்தில் பெண்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றன.விரும்பியோ விருப்பம் இல்லாமலோ பெண்கள் இதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.உதாரணமாக திருமணமான பெண்ணை அவர்கள் கழுத்திலிருக்கும் தாலி மற்றும் அவர்கள் காலில் அணிந்திருக்கும் மெட்டி போன்றவை அவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.இதை போன்ற அடையாளங்களை பெண்கள் விரும்பி ஏற்பதாகவே படுகின்றது.அதே பெண்ணின் கணவன் இறந்த பிறகு இந்த அடையாளங்களை நீக்க சொல்லும் பொது அவள் மன ரீதியாக ஒடுக்கபடுகிறாள்,தாலி,மெட்டி போன்றவற்றை விரும்பி ஏற்கும் பெண்கள் இதனால் தங்களுக்கு ஏற்படும் அழகையே முக்கியமாக கருதுகிறார்கள்,ஆனால் இந்த சமூகமோ இதை அவர்களுக்கு ஒரு அடையாளத்திற்காகவே அணிவித்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.திருமணமான ஆணிற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாத போது பெண்களுக்கு மட்டும் எதற்கு.

பிறகு முக்கியமான ஒரு விஷயம் மறுமணத்தில் நாம் கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறை,மனைவி இறந்துவிட்டால் உடனே ஆண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் நம் சமூகம் பெண்களை அப்படி நடத்துவதில்லை.உடல் மற்றும் மன ரீதியான அனைத்து ஆசைகளும் ஆண்களை போலவே பெண்ணிற்கும் உள்ளது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.இன்னும் ஒரு படி மேலே போய்,மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணை கேவலமாக பார்க்கும் பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது.

சமையல் கூடம்,பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடமாய் உள்ளது .வீடு கட்டும் போதே அம்மாவுக்கோ,மனைவிக்கோ பிடித்த மாதிரியாய் சமையலறையை கட்டுகிறோம்,இதை அவர்களும் இயல்பாய் ஏற்றுகொள்கிறார்கள்,நம் சமூகம் அவர்களை அப்படி பழக்கி விட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூட சமையல் வேலையை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஆண்கள் விரும்புவதுமில்லை கவலைபடுவதும் இல்லை.

இதை போல் காலை படுக்கையிலிருந்து எழுந்ததிலுருந்து இரவு உறங்கும் வரை எந்த வகையிலாவது பெண்கள் தங்களை காத்து கொள்ள போரடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவர்களுக்கு தர வேண்டியது அதிகபட்ச அன்பு அல்ல,இயல்பாய் நடந்து கொள்ளுதலே,பெண்ணும் ஆணும் சமம் என்பதே,இதை அனேக ஆண்களும்,சில பெண்கள் கூட உணர வேண்டும்.