Friday, February 27, 2009

ஹைக்கூ கவிதைகள்(2)..

காற்றுக்கு புத்தி இல்லை
கயவர்கள் மூக்கிலும்
நுழைகிறதே..

தலை எழுத்தாய் முகவரி
அஞ்சல் உறையில்..

எடுக்க மறந்ததை
சொல்லி காட்டியது
படர்ந்த தூசி..

உயிர் பெற
புதைகிறது
மண்ணில் விதைகள்..

உருவம் கொடுக்கிறார்
கடவுளுக்கு
சிற்பி..

அறிவைக் கொடுக்கும் புத்தகம்
அமைதியாய் அலமாரிகளில்
நூலகம்..

நிலவின் பிரதி
தெரியவில்லை,
வற்றிய கிணறு..

பாத்திரத்தை தேய்த்து
வயிற்றைக் கழுவும்
வேலைக்காரி..

நொடிகளுக்குள்
மனம் மாறும்
கடிகாரம்..

கப்பல்
கவிழ்த்தால்..
காகிதம்
நனைந்தது..

சின்ன சின்ன பொய்களும் அழகென்பேன்

நான் அழகா இருக்கிறேனா என்று
கேட்கிறாய் நீ..
எனக்கு பொய் சொல்ல தெரியாது என்கிறேன் நான்..
சும்மா சொல்லு என்கிறாய் நீ
உலகத்திலேயே நீ தான் அழகு என்கிறேன் நான் ..
நீயோ வெட்கத்தில் கன்னம் சிவக்கிறாய்...

உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க
என்னை ஏன் தேர்ந்தேடுத்தாய் நீ என கேட்கிறாய் நீ..
வேர் எவரும் கிடைக்காததால் என்கிறேன் நான் ..
ச்சி போடா உனக்கு எப்போவும் வெளையாட்டு தான் என்கிறாய் நீ ..
உண்மை அது தான் என்றாலும்..

என்னை எவ்வளவு பிடிக்கும்
என கேட்கிறாய் நீ..
நானோ அவள் அளவிற்கு என்கிறேன்..
நீயோ அவசரத்தில்
ஏன் அவளை விட என்னை...
என கூற முற்பட்டு
பிறகு யோசித்து என்னை
அடிக்க வருகிறாய்...

என்னை விட அதிகமாக
உனக்கு எது பிடிக்கும்
என கேட்கிறாய் நீ...
நான் உன்னை விட..
என்று யோசிப்பதற்குள்
மாறிவிடுகிறது உன் முகம்..
ஏதும் பிடிக்காது என சமாளிக்கிறேன் நான்..

Wednesday, February 25, 2009

அவளின் அந்தரங்கம் விளம்பரமாக்கபடுகிறது..

வயதை ஒத்த உடம்பின் சில
பரிணாம மாற்றங்கள் இயற்கையாய்
நடந்தே தீரும்..
இதில் ஆச்சர்யபடுவதர்கென்ன..
பெண்ணின் பருவ மாற்றமும் இதில்
ஒன்று தானே..
இதை பத்திரிக்கை அடித்து ஊர் கூட்டி
சந்தோச ஒப்பாரி வைக்கிறார்கள்...
இது என்ன அவளின் திருமண தகுதியின்
முன் அறிவிப்பா..
இல்லை அவள் செய்த சாதனையை விளக்கும்
பொதுக்கூட்டமா..
முன்னோர் வகுத்த பாதையை
பின்பற்றுவது மட்டுமல்ல
சீர் செய்வதும் நம் கடமையே..

Thursday, February 5, 2009

சற்றே வித்தியாசமான பேருந்து அனுபவம்..

எனக்கு சமீபத்தில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட சற்று வித்தியாசமான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்திறேன்.

என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் வீடு வரை செல்ல தேவையான பேருந்து கட்டணத்தில் என்னிடம் சில்லரை ஒரு ரூபாய் குறைவாக இருந்தது.நூறு ரூபாய் நோட்டை நீட்டினால் கண்டக்டரிடம் கன்னடத்தில் வாங்க வேண்டிய வசவை நினைத்து எப்படியாவது இருக்கும் சில்லரை காசை வைத்து சமாளிக்கலாம் என நினைத்து நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தம் வரை என்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன்.இரண்டு நிறுத்தம் தானே சமாளித்து பயணம் செய்து விடலாம் என்ற தைரியம் தான்.

பயணத்தின் போதே என் மனதில் நிறைய யோசனைகள்,எந்த மாதிரி நான் மாட்டிக்கொள்ள இயலும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது.இதில் இரண்டு விதமான நிகழ்வுகள் நிகழ வாய்ப்புண்டு என்று நினைத்தேன்.ஒன்று நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் எந்த பிரச்சனையுமின்றி இறங்கி விடுதல்.பேருந்தில் அதிகம் கூட்டம் இருந்ததால் இவ்வாறு தான் நடக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.சரி வேறு எந்த மாதிரி நடக்கும் ஒரு வேளை நான் கொடுத்த கட்டணத்திற்கு இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி பயணிக்கும் போது கண்டக்டர் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது.அய்யயோ ஏதும் தெரியாதது போல் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டிடுச்சா என அப்பாவியாய் கேட்டு,கண்டக்டரை பொறுத்த வரை ஒரு நிறுத்தம் தாண்டி என்னை பொறுத்த வரை சரியான நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் என நினைத்தேன்.

இந்த இரு மாதிரியான நிகழ்வுகளை தவிர வேறு மாதிரி நிகழ வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன்.நீங்களும் நன்கு யோசியுங்கள் வேறு எந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறது, எனக்கு நடந்ததே.. நான் கொடுத்த கட்டணத்திற்கு உரிய நிறுத்தம் வந்ததும் என் அருகில் இருந்தவர் (ரொம்ப நல்லவர் .. வடிவேலு பாணியில் உச்சரிக்கவும்) சார் நீங்க எறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு என்று கண்டக்டர் காது பட கூறினார் அத்தோடு நிறுத்திகொள்ளாமல் இதை தாண்டுன நீங்க ஒன்றை கிலோ மீட்டர் பின்னாடி நடந்து வரணும் என்று வேறு கூறினார்.கண்டக்டர் அருகில் இல்லை என்றாலும் சமாளித்து விடலாம் அவர் என் அருகிலேயே நின்றிருந்தார்,வேறு என்ன செய்வது என்னை நானே நொந்த படியே பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கு உதவி செய்த பெருமிதத்தில் அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்....

Wednesday, February 4, 2009

பெண்ணியம்...

பொதுவாகவே பிரபலமானவர்களை பார்க்க பெரும்பாலானோர் ஆசைப்படுவதுண்டு அல்லது தான் விரும்பும் துறையில் அனுபவமிக்கவரை பார்க்க ஆசைப்படுவதுண்டு.அந்த வகையில் எனக்கு பத்திரிகை ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை சென்ற வாரம் என்னுடைய அண்ணனின் தயவினால் நிறைவேறியது.அவர் பெயர் ஜவஹர்,சென்னை திருவான்மியூரில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தோம்.தமிழர் கண்ணோட்டம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

அறிமுக படலத்திற்கு பிறகு எங்கள் பேச்சு பெண் சுதந்திரத்தை பற்றியும்,பெண்கள் மீதான அடக்கு முறை பற்றியும் சென்றது.அங்கு நடந்த விவாதங்கள் பெண்ணியத்தை பற்றி நிறைய யோசிக்க வைத்தது .

இந்த உலகில் பெண் அடக்கு முறை ஏன் தோன்றியது,எப்போது தோன்றியது என்ற கேள்வி தான் எனக்குள் முதலில் எழுந்தது.இந்த அடக்கு முறை தோன்ற மூலக்காரணமாய் எது இருந்திருக்கும்,இயற்கையிலேயே ஆண் பெண்ணை விட பலசாலியாய் இருப்பதினாலா அல்லது பெண்களுக்கு இருக்கும் சில உடல் ரீதியான காரணத்திற்காகவா.

நம் சமூகத்தில் பெண்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றன.விரும்பியோ விருப்பம் இல்லாமலோ பெண்கள் இதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.உதாரணமாக திருமணமான பெண்ணை அவர்கள் கழுத்திலிருக்கும் தாலி மற்றும் அவர்கள் காலில் அணிந்திருக்கும் மெட்டி போன்றவை அவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.இதை போன்ற அடையாளங்களை பெண்கள் விரும்பி ஏற்பதாகவே படுகின்றது.அதே பெண்ணின் கணவன் இறந்த பிறகு இந்த அடையாளங்களை நீக்க சொல்லும் பொது அவள் மன ரீதியாக ஒடுக்கபடுகிறாள்,தாலி,மெட்டி போன்றவற்றை விரும்பி ஏற்கும் பெண்கள் இதனால் தங்களுக்கு ஏற்படும் அழகையே முக்கியமாக கருதுகிறார்கள்,ஆனால் இந்த சமூகமோ இதை அவர்களுக்கு ஒரு அடையாளத்திற்காகவே அணிவித்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.திருமணமான ஆணிற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாத போது பெண்களுக்கு மட்டும் எதற்கு.

பிறகு முக்கியமான ஒரு விஷயம் மறுமணத்தில் நாம் கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறை,மனைவி இறந்துவிட்டால் உடனே ஆண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் நம் சமூகம் பெண்களை அப்படி நடத்துவதில்லை.உடல் மற்றும் மன ரீதியான அனைத்து ஆசைகளும் ஆண்களை போலவே பெண்ணிற்கும் உள்ளது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.இன்னும் ஒரு படி மேலே போய்,மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணை கேவலமாக பார்க்கும் பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது.

சமையல் கூடம்,பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடமாய் உள்ளது .வீடு கட்டும் போதே அம்மாவுக்கோ,மனைவிக்கோ பிடித்த மாதிரியாய் சமையலறையை கட்டுகிறோம்,இதை அவர்களும் இயல்பாய் ஏற்றுகொள்கிறார்கள்,நம் சமூகம் அவர்களை அப்படி பழக்கி விட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூட சமையல் வேலையை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஆண்கள் விரும்புவதுமில்லை கவலைபடுவதும் இல்லை.

இதை போல் காலை படுக்கையிலிருந்து எழுந்ததிலுருந்து இரவு உறங்கும் வரை எந்த வகையிலாவது பெண்கள் தங்களை காத்து கொள்ள போரடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவர்களுக்கு தர வேண்டியது அதிகபட்ச அன்பு அல்ல,இயல்பாய் நடந்து கொள்ளுதலே,பெண்ணும் ஆணும் சமம் என்பதே,இதை அனேக ஆண்களும்,சில பெண்கள் கூட உணர வேண்டும்.