Sunday, May 4, 2008

ஹைக்கூ கவிதைகள் ...

வறுமையிலும் முகம் மலர சிரித்தான்
ரேசன் கார்டுக்காக
ஒரு போட்டோ...


உருவமில்லா காற்று
மயக்கும் இசையாய்
புல்லாங்குழலில்...

ஒரு வாய் உணவில்
இரு உயிர்கள்
கர்ப்பிணிப்பெண்...

நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..

வெறுத்த உணவு
ருசித்தது,
பசித்தவுடன்..

இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...

Saturday, May 3, 2008

கொஞ்சம் காதல் செய்வோம்....

தனிமையை ரசிக்கிறேன்..
தூக்கமின்றி தவிக்கிறேன்..
தேவையின்றி பேசுகிறேன்..
தேவையின்போது மௌனிக்கிறேன்..
வேளைதவறி உண்கிறேன்..
நாள் பாதியை கண்ணாடிமுன் தொலைக்கிறேன்..
ஆம்,
நானும் காதலிக்கிறேன்...



சத்தமில்லாமல் சிரிக்கிறேன்,
சுவையறியாமல் உண்கிறேன்,
சிநேகமில்லாமல் பழகுகிறேன்,
சிந்தனையில்லாமல் யோசிக்கிறேன்,
சலனமில்லாமல் கிடக்கிறேன்,
இது போல்,
சின்னச்சின்னதாய் சில சித்ரவதைகள்,
ஆனால்
சந்தோஷமாய்..


சில சமயங்களில்
நீ அழகு
பல சமயங்களில்
நீயே அழகு
சில சமயங்களில்
நீ நீயாக
பல சமயங்களில்
நீயே எனக்காக...

பேருந்து ஓட்டுனர்...

அனைத்து ஆண்களும்
பெண்ணிற்கு வாழ்க்கைபடுவார்கள்...
இவர் பேருந்திற்கு
வாழ்க்கைப்படுகிறார்...
முக்கால் தினம் பேருந்து இருக்கையிலும்,
மீதி மொட்டைமாடி கட்டிலிலும்
முடிகிறது...
பேருந்தில் வேலைக்கு செல்வோர்
மத்தியில்
இவர் பேருந்திலேயே வேலை செய்கிறார்..
அதிகபட்சமாய் இவர் நாள் முழுவதும்
பேசும் வார்த்தை
'படியில் நிற்காதே மேலே ஏறு 'என்பது,
எந்த ஒரு இரைச்சலிலும் நடத்துனரின்
விசில் சத்தம் மட்டும் கேட்க
இவர் காது நன்கு பழக்கப்பட்டிருக்கிறது ..
இவருடைய அப்போதைய தற்காலிக லட்சியம்
பேருந்தை சேதாரமில்லாமல்
டிப்போவில் சேர்ப்பது...