Wednesday, February 4, 2009

பெண்ணியம்...

பொதுவாகவே பிரபலமானவர்களை பார்க்க பெரும்பாலானோர் ஆசைப்படுவதுண்டு அல்லது தான் விரும்பும் துறையில் அனுபவமிக்கவரை பார்க்க ஆசைப்படுவதுண்டு.அந்த வகையில் எனக்கு பத்திரிகை ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை சென்ற வாரம் என்னுடைய அண்ணனின் தயவினால் நிறைவேறியது.அவர் பெயர் ஜவஹர்,சென்னை திருவான்மியூரில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தோம்.தமிழர் கண்ணோட்டம் போன்ற பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

அறிமுக படலத்திற்கு பிறகு எங்கள் பேச்சு பெண் சுதந்திரத்தை பற்றியும்,பெண்கள் மீதான அடக்கு முறை பற்றியும் சென்றது.அங்கு நடந்த விவாதங்கள் பெண்ணியத்தை பற்றி நிறைய யோசிக்க வைத்தது .

இந்த உலகில் பெண் அடக்கு முறை ஏன் தோன்றியது,எப்போது தோன்றியது என்ற கேள்வி தான் எனக்குள் முதலில் எழுந்தது.இந்த அடக்கு முறை தோன்ற மூலக்காரணமாய் எது இருந்திருக்கும்,இயற்கையிலேயே ஆண் பெண்ணை விட பலசாலியாய் இருப்பதினாலா அல்லது பெண்களுக்கு இருக்கும் சில உடல் ரீதியான காரணத்திற்காகவா.

நம் சமூகத்தில் பெண்களுக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றன.விரும்பியோ விருப்பம் இல்லாமலோ பெண்கள் இதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.உதாரணமாக திருமணமான பெண்ணை அவர்கள் கழுத்திலிருக்கும் தாலி மற்றும் அவர்கள் காலில் அணிந்திருக்கும் மெட்டி போன்றவை அவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.இதை போன்ற அடையாளங்களை பெண்கள் விரும்பி ஏற்பதாகவே படுகின்றது.அதே பெண்ணின் கணவன் இறந்த பிறகு இந்த அடையாளங்களை நீக்க சொல்லும் பொது அவள் மன ரீதியாக ஒடுக்கபடுகிறாள்,தாலி,மெட்டி போன்றவற்றை விரும்பி ஏற்கும் பெண்கள் இதனால் தங்களுக்கு ஏற்படும் அழகையே முக்கியமாக கருதுகிறார்கள்,ஆனால் இந்த சமூகமோ இதை அவர்களுக்கு ஒரு அடையாளத்திற்காகவே அணிவித்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.திருமணமான ஆணிற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாத போது பெண்களுக்கு மட்டும் எதற்கு.

பிறகு முக்கியமான ஒரு விஷயம் மறுமணத்தில் நாம் கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறை,மனைவி இறந்துவிட்டால் உடனே ஆண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் நம் சமூகம் பெண்களை அப்படி நடத்துவதில்லை.உடல் மற்றும் மன ரீதியான அனைத்து ஆசைகளும் ஆண்களை போலவே பெண்ணிற்கும் உள்ளது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.இன்னும் ஒரு படி மேலே போய்,மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணை கேவலமாக பார்க்கும் பழக்கம் நம் சமூகத்தில் உள்ளது.

சமையல் கூடம்,பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடமாய் உள்ளது .வீடு கட்டும் போதே அம்மாவுக்கோ,மனைவிக்கோ பிடித்த மாதிரியாய் சமையலறையை கட்டுகிறோம்,இதை அவர்களும் இயல்பாய் ஏற்றுகொள்கிறார்கள்,நம் சமூகம் அவர்களை அப்படி பழக்கி விட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூட சமையல் வேலையை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஆண்கள் விரும்புவதுமில்லை கவலைபடுவதும் இல்லை.

இதை போல் காலை படுக்கையிலிருந்து எழுந்ததிலுருந்து இரவு உறங்கும் வரை எந்த வகையிலாவது பெண்கள் தங்களை காத்து கொள்ள போரடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவர்களுக்கு தர வேண்டியது அதிகபட்ச அன்பு அல்ல,இயல்பாய் நடந்து கொள்ளுதலே,பெண்ணும் ஆணும் சமம் என்பதே,இதை அனேக ஆண்களும்,சில பெண்கள் கூட உணர வேண்டும்.

No comments: