Tuesday, March 16, 2010

வயோதிகம்..

நான் புரண்டு படுத்த போது..
நடக்க எத்தனித்த போது..
விழுந்த முதல் மழலை சொல்...
இப்படியாய்
என் முதல் செய்கைகள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் கவனித்தார்கள்...
என் நடை தளர்ந்த போது..
வாய் பிறழ்ந்த இப்போது..
ஏன் என்று கேட்கத்தான் யாருமில்லை..

Wednesday, March 10, 2010

கனவுக்காதல்...

நீ ஏன் காதலை
மறுக்க போகும் அந்த
கணத்தில் சட்டென
கண் விழித்து விட்டேன்..
நீ ஒத்துகொண்ட பிந்தைய
கணங்கள் கனவாகவே நீள்கிறது...
கடைசியில் என் காதல்
கனவாகவே ஆகிப்போனது....

Tuesday, March 9, 2010

மறதி...

அவசரமாய் புறப்படுகையில்
ஏதேனும் ஒன்றை
மறந்து வைத்துவிட்டு வர
எப்போதும் மறப்பதில்லை..

Tuesday, March 2, 2010

காதலும் கவிதையும்....

நீ காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து
நன்கு கவிதை எழுதுகிறாய்
என்கிறார்கள்..
உன்னை தானே எழுதிக்கொண்டிருக்கிறேன்
எப்படி இல்லாமல் போகும் நன்கு ...

வார்த்தைகளிலான என் கவிதை
உயிர் பெற்று புலம்புகிறது
உன்னை பார்த்தவுடன் ...

உன்னைப்பற்றி தான்
எழுதுகிறேன் என்றாலும்
நீ அருகில் இருந்தால் எழுத
முடிவதில்லை..
வார்த்தைகள் கைக்குள் சிக்கி
காற்றில் கரைந்து விடுகின்றன ..

அழகு,
வெட்கம்,
கோபம்,
என
அனைத்திற்கும்
உன்னையே உதாரணமாய்
காட்டுகிறது இந்தக்காதல்...

நான் காதலிப்பதை
வெளிக்காட்டிவிட்டது
இந்த பாழாய்ப்போன கவிதை ....

எனக்கு
காதலையும்
கவிதையையும்
இந்த
காதலே கற்றுக்கொடுத்தது..

உன்னை காதலித்ததற்காய்
கடைசியில் என்னிடம் எஞ்சியது
நான் எழுதிய கவிதைகளே ...

Tuesday, February 23, 2010

சந்தர்ப்பங்கள்...

பணம் ஒன்றே முக்கியமானதாய்
எண்ணியிருந்தால் நான்
வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் என
நினைத்திருந்தால் அவர்
மிருகமாகவே இருந்திருப்பார்...
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..

Tuesday, February 2, 2010

ரஜினி..

ஒரு சேர இரண்டு அடிகளையோ,
இரண்டு மாடிப்படிகளை அடுத்தடுத்தோ
கடந்து வந்ததில்லை..
ரஜினி படத்தை பார்த்து திரும்பிய அந்த பால்ய நாட்களில்
எப்படி பிடிக்காமல் போகும் எங்களுக்கு இப்போது ரஜினியை...