Wednesday, November 12, 2008

எங்கோ எப்போதோ எழுதியது...

சிறுது நேர இடைவெளிக்கு
பிறகு தொடர்ந்த எங்கள்
பேருந்து பயணத்தில் ..
ஓர் எறும்பும்
சேர்ந்து கொண்டது....

நான் பிறக்கும் போது
சிரித்து கொண்டே
பிறந்தேனாம்
என் அப்பா
அடிக்கடி சொல்வார்..
நான் அழுது
இதுவரை அவர்
பார்த்ததில்லை
நான் இப்போது அழுவதை
பார்ப்பதற்கு
அவர் இல்லை..

Monday, October 6, 2008

படித்ததில் பிடித்தது...

இங்கு வாழ்க்கை வாங்க(விற்க)ப்படும
தூங்க நினைத்து வெகுநேரம் தூக்கம் வராமல்
எழுந்தெழுதிய கவிதையிது.

அன்புத் தம்பி..!!

சிலிர்க்க வைக்கிறது
உனது வளர்ச்சி...
பெருமகிழ்ச்சி.

மூன்று வருடம் போதும்
சேமிப்பில்
தந்தையை பின்னுக்கு தள்ள.

முரண்பாடய் இருக்கிறது.
'கூண்டுப்பறவையல்ல நான் என்கிறாய்'
ஆனால்,
'கூண்டுக்குள்தான் அடைந்துகிடக்கிறாய்'.

இணையத்தால்
இதயம் இழக்கிறாய்.
கணினியில்
காலம் கழிக்கிறாய்.
தொலைகாட்சியால்
தொலைந்து போகிறாய்.
துரித உணவால்
தேகம் நச்சாக்குகிறாய்.
செல்பேசியால்
சிக்கி தவிக்கிறாய்.

இரவு , பகல்
இன்று வித்தியாசமில்லை.
அழைப்பு நிறுவன இயந்திரம்.
கண்ணதாசன்
இன்றிருந்தால்.
'தூங்கு தம்பி தூங்கு' என்று சொல்வானோ ??? :)

பழகுவது எப்படி?
சிரிப்பது எப்படி?
அழுவது எப்படி?
தூங்குவது எப்படி?
உண்பது எப்படி?
வாழ்வது எப்படி?
'புத்தகம் போதும் உனக்கு'.

வார கடைசிகளில்
வாழ்க்கை
வாங்குகிறாய்.
'உல்லாச அரங்குகளில்'.

அட்டவணை
அலசுகிறாய்.
'பெற்றவர்களை பார்ப்பது எப்போது'..??

மனிதம் மறந்துகொண்டிருக்கும்
'மாத்திரை' மனிதனே..!

பழக கல்.
சுற்றம் நோக்கு.
சுயமிழக்காதே....

Saturday, October 4, 2008

அப்பா..

நீ
அம்மா செல்லமா
அப்பா செல்லமா..
என்றால் எப்படி சொல்வேன்
அம்மா செல்லமான அப்பா செல்லம் என்று ..

பிரசவத்தின் போது
அம்மா ஒரு குழந்தைக்கு
தாயாகிறாள்
அப்பாவோ இரு குழந்தைக்கு
தந்தையாகிறார்
அம்மாவையும் சேர்த்து ..

அம்மாவிற்கு
அனுபவம் இருந்ததாலோ என்னோவோ
அப்பா மட்டுமே
கண் கலங்கினார்
நான் புகுந்த வீட்டிற்கு செல்ல்லும்போது..

நான் பொய் சொல்வதை
தெரிந்து கொண்டதாய்
அப்பா இது வரை
காட்டி கொண்டதே இல்லை..

என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா..
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..

Thursday, August 14, 2008

அறிமுகங்கள்..

அறிமுகங்கள் ஆச்சர்யமானவை...
இவ்வுலகில் உனக்கும் உன்னையும் அறிந்தவர்கள்
எத்தனை பேர் ..
இந்த சொற்பச்சிலரில்
ஏன் இத்தனை சண்டைகள் சச்சரவுகள் ..
விசாலப்படுத்து உன் அறிமுகவட்டத்தை
விசாலப்படுத்து..
உறவுகளின் மூலம் சிலரை
அறிமுகம் கொள்..
நட்பு என்ற உறவின் மூலம்
சிலரை அறிமுகம் கொள் ..
ஏன் இத்தனை பேச்சு
இறக்கும் தருவாயில்
ஏதேனும் அறிமுகம் கிடைத்தால்
நட்போடு கைக்குலுக்கி
சந்தோஷமாய் உயிர் விடு..

Saturday, July 5, 2008

நாவிதன்...

அனைவருக்கும் தலைக்கு மேல் வேலை இருக்கும்
இவருகென்னவோ தலையில் தான் வேலை...
ஒரு கையில் சீப்பு, ஒரு கையில் கத்திரி,
இரண்டையும் ஒரே நேரத்தில் லாவகமாக கொண்டு செல்ல
இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது..
ஞாயிற்றுகுகிழமை இவர் பொழுது சாய்ந்து வீடு
திரும்புகையில்,
என்னத்த வெட்டி முறிசிட்டன்னு
யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது..
கை மேல் பலன் என்பார்கள்
அது இவர் விஷயத்தில் சரியாய் இருக்கிறது ..
கடவுள் படைத்த மனிதனை
அழகாக்கும்
இவர்களும் ஒரு வகையில் கடவுளே ...

Friday, June 27, 2008

இரயில் பயணத்தில் எழுதியது...

பணம் ஒன்றே முக்கியமாய் எண்ணியிருந்தால்
நான் வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் நினைத்திருந்தால்
அவர் மிருகமாகவே இருந்திருப்பார்..
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..


என்ன மனுச வாழ்க்கை சார் இது..
அன்னைக்கு எங்கப்பா இறந்து போயிருந்தார்
நான் அழுதுகிட்டு தான் இருந்தேன்..
மூணு மணிநேரத்திலே பசிக்க ஆரம்பிடுச்சுருச்சு..
நானும் வீம்பா ஒரு நாள் இருந்திட்டேன்..
கடைசியிலே பசி தான் ஜெயித்தது..
என்னத்த சார் கொண்டு போப்போறோம் கடைசியிலே..
இருக்கிற வரைக்கும்
சக மனிதர்களிடம்..
என்ன சார் நல்ல இருக்கிங்களா..
கவலைபடாதீங்க சார்,
போன்ற ஆறுதல் வார்த்தைகள்..
கடைசியா ஒண்ணு சார்..
இருக்கிற வரைக்கும் கொடுப்போம்..
அதை விட முக்கியம்
சாகிற வரைக்கும் வாழ்வோம்..

Monday, June 16, 2008

படித்ததில் பிடித்தவை ...

அன்பு என்ற தலைப்பில்..
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்..
அம்மா
என்றேன் உடனே..
கேட்டது அம்மாவை இருந்திருந்தால்..
இன்னும்
சுருக்கமாய் சொல்லி இருப்பேன்
நீ என்று ...கன்ஷியுமர் கொர்ட்டுக்கு செல்கிறேன்
ஒரு லட்சம் கொடுத்து வாங்கிய மாப்பிளைக்கு
காது செவிடு...

Tuesday, June 10, 2008

கட்டியவள்..

சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தன..
பெற்ற மகன் கடைசியாய் பறந்து வந்திருந்தான்..
அனைவரின் முகத்திலும் போலியான கவலைகள்..
பதினோர் நாள் காரியங்கள் நடந்து முடிந்தன...
போட்டத போட்டபடியே வந்துட்டேன்..
இப்படியாய் பல காரணங்கள்
அவரவர்கள் புறப்பட..
மகன் முன்னமே புறப்பட்டு போயிருந்தான்..
இப்போது வீட்டில் நான் மட்டும் தனியாக..
கட்டிய மனைவியை விட வேறென்ன துணை இருந்துவிட முடியும்
மனிதனின் வாழ்க்கையில்...
அனைவருக்கும் தன் மனைவியை பிடிக்கும்...
எனக்கு அவ்வளவு பிடிக்கும்...

Sunday, June 1, 2008

நீண்டு கிடக்கும் ஆச்சர்யங்கள்....


எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது ..
கண் முன்னே நீண்டு கிடக்கும்
தார்ச்சாலையில்
கால் வைத்து புறப்பட்டேன்
காலச்சக்கரத்தில் ஆயுள் முக்கால்
கரைந்துவிட்டது..
புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டேன்
எங்கு தொடங்கி
எங்கு தான் முடிகிறதோ....

சாலைகள் கண் முன்னே வீழ்ந்து கிடக்கும் ஆச்சர்யங்கள்.அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக உள்ளது.மனிதர்கள் தான் அதனிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள்.நாம் சிறுவயதில் ஒரு வித பயத்துடன் தான் சாலையை அணுகுகிறோம்.அதனால் தான் என்னவோ குழந்தைகளை பயமுறுத்த எங்கேயாவது தெரியாத சாலையில் விட்டுவிடுவோம் என பயமுறுத்துகிறோம்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நாம் சாலைகளோடு நன்கு பழகி விடுகிறோம்.நம் மனதின் நிலைப்பாடு சாலைகளை வைத்து தான் இருக்கிறது என நினைக்கிறேன்.அதனால் தான் என்னவோ வார இறுதி நாட்களில் சாலைகள் காலியாக இருக்கும் போது நமக்குள்ளும் ஒரு வித வெறுமை சூழ்ந்து கொள்கிறது.

நம்மை குழந்தை பிராயத்தில் இருந்து,முதிர்ந்த வயது வரை சாலைகள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது.சாலைகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் வருவதில்லை.அவை எப்போதும் ஒரே மாதிரியை அமைதியை இருக்கிறது.அதனால் தான் என்னவோ,சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.

சிறு வயதில் எனக்கு நன்கு நினைவு இருக்கிறது,என்னுடைய அப்பா,என்னையும்
தங்கையையும் சைக்கிள் உட்கார வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வார்.என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு தெருவை தாண்டி தான் பள்ளி இருந்தது.ஏனோ தெரியவில்லை என்னுடைய அப்பா தினமும் ஒரே வழியாக தான் அழைத்து செல்வார்.

நானும் இந்த இரண்டு தெருவும் தான் உலகம் என நினைத்திருந்தேன்.சற்று பெரிய வகுப்பு சென்றவுடன் தான் பள்ளிக்கு தனியாக செல்ல அனுமதி தந்தனர்.அப்போது கூட என்னுடைய அப்பா,ஏனக்கு அவர் பழக்கிய வழியிலேயே செல்ல அறிவுறித்தனார்.இந்த இரண்டு தெருவை தாண்டி என்ன தான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் அப்போது தான் ஏற்பட்டது..

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் போது வேறு வழியே செல்லலாம் என உத்தேசித்து கொண்டேன்.என் தங்கையை அழைத்துக்கொண்டு,வேறு பாதையில் வந்த போது ஒவ்வொரு சாலையின் விஸ்தாரிப்பும்,அழகும் எனக்கு தெரிந்தது,வழியில் இருந்த பூங்காவில் நானும்,என் தங்கையும் விளையாடிக்கொண்டிருந்தோம்,இருட்டியதே தெரியவில்லை,பிறகு தான் லேசாக பயம் வர ஆரம்பித்தது.

இருவரும் அழுது கொண்டே நடந்து வந்தோம்.பகலில் வித்தியாசமாய் தெரிந்த ஒவ்வொரு சாலைகளும்,இரவில் ஒரே மாதிரியை தெரிந்தன.அனைத்து சாலைகளும்,பகலில் ஒரு மாதிரியாகவும்,இரவில் ஒரு மாதிரியாகவும் அரிதாரம் பூசிக்கொள்கிறது.

நாங்கள் அழுது கொண்டே வருவதை பார்த்த ஒரு கடைக்காரர்,எங்களை அழைத்து கடையில் உட்காரவைத்து,விசாரித்தார்.எங்களுக்கு அப்போது வீட்டின் மீதான நினைவும்,சாலையைப் பற்றிய பயமும் தான் இருந்தது.

அந்த கடைக்காரர் எங்களுக்கு சாப்பிட ஏதோ மிட்டாய் கொடுத்திருந்தார்,வெகு நேரம் அந்த மிட்டாயயை இருவரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.எங்கள் கவனம் முழுவதும் சாலையிலும்,அதில் வருவோர் போவோரின் மீதும் இருந்தது.

வெகு தூரத்தில் அப்பாவை பார்த்தவுடன்,இருவரும் ஓடிப்போய் அப்பாவை பிடிதுகொண்டோம்,என் அப்பாவிற்கு எங்களை பார்த்ததற்கான சந்தோஷம் அப்போது தெரிந்தது.அப்பாவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருவரும் அந்த மிட்டாயை சாப்பிட்டு கொண்டே சென்றோம்.ஏனோ அந்த கடைக்காரரின் நினைவு எங்களுக்கு அப்போது வரவே இல்லை.அதன் பிறகு சாலைகளின் மீது இருந்த பயம் போய்விட்டது,அந்த கடைக்காரர் மட்டும் நினைவில் இருக்கிறார்.அன்று ஒரு வேளை சொல்லி விட்டு வந்திருந்தால் அந்த கடைக்காரரை மறந்திருபேனோ....

Sunday, May 4, 2008

ஹைக்கூ கவிதைகள் ...

வறுமையிலும் முகம் மலர சிரித்தான்
ரேசன் கார்டுக்காக
ஒரு போட்டோ...


உருவமில்லா காற்று
மயக்கும் இசையாய்
புல்லாங்குழலில்...

ஒரு வாய் உணவில்
இரு உயிர்கள்
கர்ப்பிணிப்பெண்...

நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..

வெறுத்த உணவு
ருசித்தது,
பசித்தவுடன்..

இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...

Saturday, May 3, 2008

கொஞ்சம் காதல் செய்வோம்....

தனிமையை ரசிக்கிறேன்..
தூக்கமின்றி தவிக்கிறேன்..
தேவையின்றி பேசுகிறேன்..
தேவையின்போது மௌனிக்கிறேன்..
வேளைதவறி உண்கிறேன்..
நாள் பாதியை கண்ணாடிமுன் தொலைக்கிறேன்..
ஆம்,
நானும் காதலிக்கிறேன்...சத்தமில்லாமல் சிரிக்கிறேன்,
சுவையறியாமல் உண்கிறேன்,
சிநேகமில்லாமல் பழகுகிறேன்,
சிந்தனையில்லாமல் யோசிக்கிறேன்,
சலனமில்லாமல் கிடக்கிறேன்,
இது போல்,
சின்னச்சின்னதாய் சில சித்ரவதைகள்,
ஆனால்
சந்தோஷமாய்..


சில சமயங்களில்
நீ அழகு
பல சமயங்களில்
நீயே அழகு
சில சமயங்களில்
நீ நீயாக
பல சமயங்களில்
நீயே எனக்காக...

பேருந்து ஓட்டுனர்...

அனைத்து ஆண்களும்
பெண்ணிற்கு வாழ்க்கைபடுவார்கள்...
இவர் பேருந்திற்கு
வாழ்க்கைப்படுகிறார்...
முக்கால் தினம் பேருந்து இருக்கையிலும்,
மீதி மொட்டைமாடி கட்டிலிலும்
முடிகிறது...
பேருந்தில் வேலைக்கு செல்வோர்
மத்தியில்
இவர் பேருந்திலேயே வேலை செய்கிறார்..
அதிகபட்சமாய் இவர் நாள் முழுவதும்
பேசும் வார்த்தை
'படியில் நிற்காதே மேலே ஏறு 'என்பது,
எந்த ஒரு இரைச்சலிலும் நடத்துனரின்
விசில் சத்தம் மட்டும் கேட்க
இவர் காது நன்கு பழக்கப்பட்டிருக்கிறது ..
இவருடைய அப்போதைய தற்காலிக லட்சியம்
பேருந்தை சேதாரமில்லாமல்
டிப்போவில் சேர்ப்பது...

Friday, April 25, 2008

பால்ய நினைவுகள்..நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்,ஊர் விட்டு ஊர் வந்து,பிழைப்புக்காக வெளியூர்க்கு,வெளிநாடுகளுக்கு சென்று வாழ்பவர்கள் எதேச்சையாய் எங்காவது தங்கள் ஊர் பேரை கேட்டால் சற்றே அமைதியகிவிடுவார்கள்.மனது கண்டிப்பாய் தான் வாழ்ந்த ஊர்,சுற்றிய தெருக்கள்,படித்த பள்ளி,கல்லூரி,பழகிய நண்பர்கள் என அலை பாயும்....கொஞ்சம் யோசித்து பார்த்தால் நாம் எங்கேயோ தொலைத்த வாழ்க்கையை எங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறோம் என தோன்றுகிறது.

யாருமே தங்கள் சொந்த ஊர்,கிராமத்தை விட்டு வர விரும்புவதில்லை.காலச்சூழல் தான் படித்தவர்கள்,படிக்காதவர்கள் என அனைவரையும் வாழ்க்கையை தேடி எங்கோ போக வைத்துவிடுகிறது.இடம் மாறி தூங்கினாலே தூக்கம் வர தவிக்கும் நமக்கு,பிறந்த இடத்தை தாண்டி வாழ இந்த வாழ்க்கை பழக்கி விடுகிறது.

என்ன தான் வசதியாய் வாழ்ந்தாலும்,நாம் பிறந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தற்போதைய முகவரி,நிரந்தர முகவரி என நடோடிகளாகத்தான் இருக்கிறோம்.

பிழைப்புக்காக வந்த இடத்திலேயே காலம் அவனை கட்டிபோட்டு விடுகிறது.தனக்கு பின்னால் தன்னுடைய வாரிசுகள்,அந்த நகர சூழலிலேயே வாழ பழகிவிடுகிறார்கள்.இப்படியே கிராமத்து மனிதர்கள் இடம் பெயர்ந்தால்.இந்த கிராமங்களின் நிலை தான் என்ன,அங்கு வாழ்ந்த முனியாண்டித்தேவரோ,ஆறுமுக அண்ணாச்சியின் அடையாளம் தான் என்ன,அவர்கள் வாழ்ந்த அந்த சிதிலடைந்த வீடும்,ஒற்றை தென்னை மரமும் தான் மிச்சமிருக்கிறது.

இத்தனை மாற்றங்கள் செய்யும் இந்த காலம் தான் மிக ஆச்சர்யமானது.தன்னோடு பழகிய நண்பர்கள்,எதிர் வீட்டு ஜன்னல்,மொட்டை மாடி நிலா என அனைத்துடனும் நம்மை அந்நியப்படுத்தி விடுகிறது.தான் உயிராக நினைத்த நண்பனை நீண்ட கழித்து எங்கேயாவது சந்திக்கும் போது பேச கூட நமக்கு நேரம் இருப்பதில்லை.

இத்தனையும் தாண்டி நாம் எதைத்தேடி தான் சென்று கொண்டு இருக்கிறோம், அனைவரிடத்திலும் இந்த கேள்வி இருக்கிறது,பதிலை யாரும் யோசிப்பதில்லை...இப்படியே வாழ பழகிவிட்டோம்.
(வலை பின்னப்படும்..)

Thursday, April 17, 2008

ஒரு காலைப்பொழுதில் ...

அது ஒரு காலைப் பொழுது,நேரம் சுமார் ஏழு அல்லது ஏழரை இருக்கலாம். என்னுடைய நண்பன் ஒருவனுக்காக வடபழனியில் உள்ள ஒரு தெருவில் அவன் வீட்டு வாசலின் எதிரில் காத்துக் கொண்டிருந்தேன். அங்கும் இங்கும் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கையில் அவளை கவனித்தேன்,என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சரி எதேட்சையாய் தான் என்னை பார்த்திருப்பாள் என நினைத்து மீண்டும் திரும்பி பார்த்தேன் அவள் என்னையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள் . நான் பார்ப்பதை கவனித்தும் அவள் தன் பார்வையை திருப்பவில்லை, எனக்கோ மனதில் சிறிது (அதிகமாகவே) சந்தோஷம் , நம்மளையும் ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு பார்க்கிறாளே என்று, சற்றே கற்பனையில் பறக்கும் வேளையில் என் நண்பன் வந்து விட்டான் . நானும் மனமில்லாமல் அவனோடு நகர , நேரே வந்தவள் நான் நின்றுகொண்டிருந்ததற்கு பின்னாடி இருந்த குப்பை தொட்டியில் குப்பையை போட்டபடி என்னை பார்த்தாள் .. ஒ அப்பா அப்ப இவ்வளவு நேரம் அவ பார்த்தது குப்பை தொட்டியை தானா, என்று நினைக்கும் வேளையில்,ஒரு சைக்கிள்காரன், யோவ் சாவு கிராக்கி என்ன பகல்லையே கனவா என்று சத்தமாய் கேட்க,நான் மனசுக்குள்ளயே ஆமாம் என்றேன்..
(வலை பின்னப்படும....)

Sunday, March 30, 2008

வலைப்பதிவில் என் முதல் பதிவு..

இந்த அவசர யுகத்தில் ஓய்வு நேரம் கிடைப்பதன்பதே அரிதாகி விட்டது, அப்படி கிடைக்கும் நேரத்தில் தங்கள் சொந்த வேலைகளை முடித்து விட்டு,எஞ்சியிருக்கும் நேரத்தில் என் வலைத்தளத்தை படியுங்கள் ....

கடைசியில், மன்னிக்கவும் முதலில் என்னை பற்றிய முகவுரை ...

இயற்பெயர் ர.ர.நவீன்பாபு,காரணப்பெயர்,புனைப்பெயர் ஏதுமில்லை.சொந்த ஊர் மதுரை,பிறந்ததும் வளர்ந்ததும் மதுரையில் தான்.இப்படி ஏன் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் ஆச்சர்யபடலாம்,ஏனெனில் இங்கே தாய்நாடு இந்தியா என்பது வெறும் பேச்சிற்கு தான்,ஆனால் நிஜத்தில் மொழி,ஜாதி,மாநிலவாரியாக நம் நாட்டை பிரித்திருக்கிறார்கள் நம் மரியாதைக்குரிய சிலர்(புரிந்துகொள்ளவும்).

தந்தை பெயர் ர.ச.ரெங்கன் மறுபிறவி என்று ஒன்று இருந்தால் எங்காவது ஒரு வயது குழந்தையாக இருப்பார் என நினைக்கிறேன்.

அம்மாவின் பெயர் ர.ர.மதனவல்லி,அப்பா,நான்,என் தங்கைக்காக வாழ்ந்துகொண்டிருந்த அவர்,தற்போது எங்கள் இருவருக்காக ...

நான் மதுரையில் பொறியியல் படிப்பை முடித்து விட்டது சிங்காரசென்னையில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன்.

மற்றபடி தமிழில் நிறைய ஆர்வம் உண்டு...அந்த தைரியத்தில் வலைப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன் ......

முதலில் நான் எழுதியதில் மிகவும் ரசித்த கவிதைகள் சில ...

அலுவலக அவசரத்தில் கணவன் ..
பள்ளி அவசரத்தில் குழந்தைகள் ..
இவர்களின் பரபரப்பில் தாய்,
ஆயிரம் குற்றங்கள்,குறைகள்
எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
இன்முகமாய் இரவு உறங்கும் வரை
ஆனால் யாரும் கேட்பதில்லை ..
நீ சாப்பிட்டியா என்று...


கைக்கு எட்டியது ..
தலைக்கு எட்டவில்லை
விதவை பூக்காரி..


சற்றுமுன் தான் இறங்கிய பேருந்தும்,
தவறவிட்ட இரயிலும்,
விபத்துக்குள்ளாகும் போது..
அப்பாடா என நினைக்கும் மனது,
ஏனோ இறந்தவர்களை
எண்ண மறந்துவிடுகிறது....


தாய்க்கு பெயரளவில் முக்கியத்துவம்..
தந்தைக்கு பெயரிலேயே முக்கியத்துவம் ..
சந்தோஷ் சுப்ரமணியம்...


இறைவனை பார்க்க முடிவதில்லை
ஏழைகள் சிரிப்பதேஇல்லையே ...

பாத்திரத்தை தேய்த்து..
வயிற்றை கழுவும்..
வேலைக்காரி..

(வலை பின்னப்படும்..)