Friday, April 25, 2008

பால்ய நினைவுகள்..



நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்,ஊர் விட்டு ஊர் வந்து,பிழைப்புக்காக வெளியூர்க்கு,வெளிநாடுகளுக்கு சென்று வாழ்பவர்கள் எதேச்சையாய் எங்காவது தங்கள் ஊர் பேரை கேட்டால் சற்றே அமைதியகிவிடுவார்கள்.மனது கண்டிப்பாய் தான் வாழ்ந்த ஊர்,சுற்றிய தெருக்கள்,படித்த பள்ளி,கல்லூரி,பழகிய நண்பர்கள் என அலை பாயும்....கொஞ்சம் யோசித்து பார்த்தால் நாம் எங்கேயோ தொலைத்த வாழ்க்கையை எங்கேயோ தேடிக்கொண்டிருக்கிறோம் என தோன்றுகிறது.

யாருமே தங்கள் சொந்த ஊர்,கிராமத்தை விட்டு வர விரும்புவதில்லை.காலச்சூழல் தான் படித்தவர்கள்,படிக்காதவர்கள் என அனைவரையும் வாழ்க்கையை தேடி எங்கோ போக வைத்துவிடுகிறது.இடம் மாறி தூங்கினாலே தூக்கம் வர தவிக்கும் நமக்கு,பிறந்த இடத்தை தாண்டி வாழ இந்த வாழ்க்கை பழக்கி விடுகிறது.

என்ன தான் வசதியாய் வாழ்ந்தாலும்,நாம் பிறந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தற்போதைய முகவரி,நிரந்தர முகவரி என நடோடிகளாகத்தான் இருக்கிறோம்.

பிழைப்புக்காக வந்த இடத்திலேயே காலம் அவனை கட்டிபோட்டு விடுகிறது.தனக்கு பின்னால் தன்னுடைய வாரிசுகள்,அந்த நகர சூழலிலேயே வாழ பழகிவிடுகிறார்கள்.இப்படியே கிராமத்து மனிதர்கள் இடம் பெயர்ந்தால்.இந்த கிராமங்களின் நிலை தான் என்ன,அங்கு வாழ்ந்த முனியாண்டித்தேவரோ,ஆறுமுக அண்ணாச்சியின் அடையாளம் தான் என்ன,அவர்கள் வாழ்ந்த அந்த சிதிலடைந்த வீடும்,ஒற்றை தென்னை மரமும் தான் மிச்சமிருக்கிறது.

இத்தனை மாற்றங்கள் செய்யும் இந்த காலம் தான் மிக ஆச்சர்யமானது.தன்னோடு பழகிய நண்பர்கள்,எதிர் வீட்டு ஜன்னல்,மொட்டை மாடி நிலா என அனைத்துடனும் நம்மை அந்நியப்படுத்தி விடுகிறது.தான் உயிராக நினைத்த நண்பனை நீண்ட கழித்து எங்கேயாவது சந்திக்கும் போது பேச கூட நமக்கு நேரம் இருப்பதில்லை.

இத்தனையும் தாண்டி நாம் எதைத்தேடி தான் சென்று கொண்டு இருக்கிறோம், அனைவரிடத்திலும் இந்த கேள்வி இருக்கிறது,பதிலை யாரும் யோசிப்பதில்லை...இப்படியே வாழ பழகிவிட்டோம்.
(வலை பின்னப்படும்..)

Thursday, April 17, 2008

ஒரு காலைப்பொழுதில் ...

அது ஒரு காலைப் பொழுது,நேரம் சுமார் ஏழு அல்லது ஏழரை இருக்கலாம். என்னுடைய நண்பன் ஒருவனுக்காக வடபழனியில் உள்ள ஒரு தெருவில் அவன் வீட்டு வாசலின் எதிரில் காத்துக் கொண்டிருந்தேன். அங்கும் இங்கும் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கையில் அவளை கவனித்தேன்,என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சரி எதேட்சையாய் தான் என்னை பார்த்திருப்பாள் என நினைத்து மீண்டும் திரும்பி பார்த்தேன் அவள் என்னையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள் . நான் பார்ப்பதை கவனித்தும் அவள் தன் பார்வையை திருப்பவில்லை, எனக்கோ மனதில் சிறிது (அதிகமாகவே) சந்தோஷம் , நம்மளையும் ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு பார்க்கிறாளே என்று, சற்றே கற்பனையில் பறக்கும் வேளையில் என் நண்பன் வந்து விட்டான் . நானும் மனமில்லாமல் அவனோடு நகர , நேரே வந்தவள் நான் நின்றுகொண்டிருந்ததற்கு பின்னாடி இருந்த குப்பை தொட்டியில் குப்பையை போட்டபடி என்னை பார்த்தாள் .. ஒ அப்பா அப்ப இவ்வளவு நேரம் அவ பார்த்தது குப்பை தொட்டியை தானா, என்று நினைக்கும் வேளையில்,ஒரு சைக்கிள்காரன், யோவ் சாவு கிராக்கி என்ன பகல்லையே கனவா என்று சத்தமாய் கேட்க,நான் மனசுக்குள்ளயே ஆமாம் என்றேன்..
(வலை பின்னப்படும....)