Friday, June 27, 2008

இரயில் பயணத்தில் எழுதியது...

பணம் ஒன்றே முக்கியமாய் எண்ணியிருந்தால்
நான் வேசியாகவே இருந்திருப்பேன்..
பணத்தால் ஏதும் முடியும் நினைத்திருந்தால்
அவர் மிருகமாகவே இருந்திருப்பார்..
இருவருமே அப்படி இல்லை
இன்று அவர் மனிதனாக..
நான் அவரின் மனைவியாக..


என்ன மனுச வாழ்க்கை சார் இது..
அன்னைக்கு எங்கப்பா இறந்து போயிருந்தார்
நான் அழுதுகிட்டு தான் இருந்தேன்..
மூணு மணிநேரத்திலே பசிக்க ஆரம்பிடுச்சுருச்சு..
நானும் வீம்பா ஒரு நாள் இருந்திட்டேன்..
கடைசியிலே பசி தான் ஜெயித்தது..
என்னத்த சார் கொண்டு போப்போறோம் கடைசியிலே..
இருக்கிற வரைக்கும்
சக மனிதர்களிடம்..
என்ன சார் நல்ல இருக்கிங்களா..
கவலைபடாதீங்க சார்,
போன்ற ஆறுதல் வார்த்தைகள்..
கடைசியா ஒண்ணு சார்..
இருக்கிற வரைக்கும் கொடுப்போம்..
அதை விட முக்கியம்
சாகிற வரைக்கும் வாழ்வோம்..

Monday, June 16, 2008

படித்ததில் பிடித்தவை ...

அன்பு என்ற தலைப்பில்..
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்..
அம்மா
என்றேன் உடனே..
கேட்டது அம்மாவை இருந்திருந்தால்..
இன்னும்
சுருக்கமாய் சொல்லி இருப்பேன்
நீ என்று ...



கன்ஷியுமர் கொர்ட்டுக்கு செல்கிறேன்
ஒரு லட்சம் கொடுத்து வாங்கிய மாப்பிளைக்கு
காது செவிடு...

Tuesday, June 10, 2008

கட்டியவள்..

சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தன..
பெற்ற மகன் கடைசியாய் பறந்து வந்திருந்தான்..
அனைவரின் முகத்திலும் போலியான கவலைகள்..
பதினோர் நாள் காரியங்கள் நடந்து முடிந்தன...
போட்டத போட்டபடியே வந்துட்டேன்..
இப்படியாய் பல காரணங்கள்
அவரவர்கள் புறப்பட..
மகன் முன்னமே புறப்பட்டு போயிருந்தான்..
இப்போது வீட்டில் நான் மட்டும் தனியாக..
கட்டிய மனைவியை விட வேறென்ன துணை இருந்துவிட முடியும்
மனிதனின் வாழ்க்கையில்...
அனைவருக்கும் தன் மனைவியை பிடிக்கும்...
எனக்கு அவ்வளவு பிடிக்கும்...

Sunday, June 1, 2008

நீண்டு கிடக்கும் ஆச்சர்யங்கள்....


எங்கு தொடங்கி
எங்கு முடிகிறது ..
கண் முன்னே நீண்டு கிடக்கும்
தார்ச்சாலையில்
கால் வைத்து புறப்பட்டேன்
காலச்சக்கரத்தில் ஆயுள் முக்கால்
கரைந்துவிட்டது..
புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டேன்
எங்கு தொடங்கி
எங்கு தான் முடிகிறதோ....

சாலைகள் கண் முன்னே வீழ்ந்து கிடக்கும் ஆச்சர்யங்கள்.அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக உள்ளது.மனிதர்கள் தான் அதனிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள்.நாம் சிறுவயதில் ஒரு வித பயத்துடன் தான் சாலையை அணுகுகிறோம்.அதனால் தான் என்னவோ குழந்தைகளை பயமுறுத்த எங்கேயாவது தெரியாத சாலையில் விட்டுவிடுவோம் என பயமுறுத்துகிறோம்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நாம் சாலைகளோடு நன்கு பழகி விடுகிறோம்.நம் மனதின் நிலைப்பாடு சாலைகளை வைத்து தான் இருக்கிறது என நினைக்கிறேன்.அதனால் தான் என்னவோ வார இறுதி நாட்களில் சாலைகள் காலியாக இருக்கும் போது நமக்குள்ளும் ஒரு வித வெறுமை சூழ்ந்து கொள்கிறது.

நம்மை குழந்தை பிராயத்தில் இருந்து,முதிர்ந்த வயது வரை சாலைகள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது.சாலைகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் வருவதில்லை.அவை எப்போதும் ஒரே மாதிரியை அமைதியை இருக்கிறது.அதனால் தான் என்னவோ,சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது.

சிறு வயதில் எனக்கு நன்கு நினைவு இருக்கிறது,என்னுடைய அப்பா,என்னையும்
தங்கையையும் சைக்கிள் உட்கார வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வார்.என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு தெருவை தாண்டி தான் பள்ளி இருந்தது.ஏனோ தெரியவில்லை என்னுடைய அப்பா தினமும் ஒரே வழியாக தான் அழைத்து செல்வார்.

நானும் இந்த இரண்டு தெருவும் தான் உலகம் என நினைத்திருந்தேன்.சற்று பெரிய வகுப்பு சென்றவுடன் தான் பள்ளிக்கு தனியாக செல்ல அனுமதி தந்தனர்.அப்போது கூட என்னுடைய அப்பா,ஏனக்கு அவர் பழக்கிய வழியிலேயே செல்ல அறிவுறித்தனார்.இந்த இரண்டு தெருவை தாண்டி என்ன தான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் அப்போது தான் ஏற்பட்டது..

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் போது வேறு வழியே செல்லலாம் என உத்தேசித்து கொண்டேன்.என் தங்கையை அழைத்துக்கொண்டு,வேறு பாதையில் வந்த போது ஒவ்வொரு சாலையின் விஸ்தாரிப்பும்,அழகும் எனக்கு தெரிந்தது,வழியில் இருந்த பூங்காவில் நானும்,என் தங்கையும் விளையாடிக்கொண்டிருந்தோம்,இருட்டியதே தெரியவில்லை,பிறகு தான் லேசாக பயம் வர ஆரம்பித்தது.

இருவரும் அழுது கொண்டே நடந்து வந்தோம்.பகலில் வித்தியாசமாய் தெரிந்த ஒவ்வொரு சாலைகளும்,இரவில் ஒரே மாதிரியை தெரிந்தன.அனைத்து சாலைகளும்,பகலில் ஒரு மாதிரியாகவும்,இரவில் ஒரு மாதிரியாகவும் அரிதாரம் பூசிக்கொள்கிறது.

நாங்கள் அழுது கொண்டே வருவதை பார்த்த ஒரு கடைக்காரர்,எங்களை அழைத்து கடையில் உட்காரவைத்து,விசாரித்தார்.எங்களுக்கு அப்போது வீட்டின் மீதான நினைவும்,சாலையைப் பற்றிய பயமும் தான் இருந்தது.

அந்த கடைக்காரர் எங்களுக்கு சாப்பிட ஏதோ மிட்டாய் கொடுத்திருந்தார்,வெகு நேரம் அந்த மிட்டாயயை இருவரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.எங்கள் கவனம் முழுவதும் சாலையிலும்,அதில் வருவோர் போவோரின் மீதும் இருந்தது.

வெகு தூரத்தில் அப்பாவை பார்த்தவுடன்,இருவரும் ஓடிப்போய் அப்பாவை பிடிதுகொண்டோம்,என் அப்பாவிற்கு எங்களை பார்த்ததற்கான சந்தோஷம் அப்போது தெரிந்தது.அப்பாவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருவரும் அந்த மிட்டாயை சாப்பிட்டு கொண்டே சென்றோம்.ஏனோ அந்த கடைக்காரரின் நினைவு எங்களுக்கு அப்போது வரவே இல்லை.அதன் பிறகு சாலைகளின் மீது இருந்த பயம் போய்விட்டது,அந்த கடைக்காரர் மட்டும் நினைவில் இருக்கிறார்.அன்று ஒரு வேளை சொல்லி விட்டு வந்திருந்தால் அந்த கடைக்காரரை மறந்திருபேனோ....