Wednesday, March 18, 2009

ஹைக்கூ வரிசை...

பரிமாறி
பசியாறும்
அம்மா..

புள்ளியில்
ஆரம்பித்து
கோலத்தில்
முடிகிறது..

இலையில் மிச்சம்
வேண்டாம்..
எச்சம் என்பார்கள்..

விழுந்து
காக்கும்
மழை..

அழ ஆரம்பிக்கும்
சுவர்கள்
ஆகப்போகும் அவலத்தை எண்ணி
கரித்துண்டுடன் ஒருவன்..

Sunday, March 15, 2009

பேருந்து நிஜங்கள்..

காலையில் தவறவிட்ட
பேருந்திலிருந்து
ஆரம்பமாகிறது
அன்றைய அலுவலக
நெருக்கடிகள்..

நியதி ஒன்றுமில்லை
எழுபவரின்
அருகில் நிற்பதொன்றே
அதிகபட்ச தகுதி
பேருந்து இருக்கையில்
அமர்வதற்கு..

அந்த பேருந்து ஓட்டுனர்
இதுவரை
தன் குழந்தையை
பள்ளிக்கு கொண்டு சென்று
விட்டதில்லையாம்..

அவளின் அவசரம்
அவரின் அலட்சியம்
நெடுஞ்சாலையில்
நில்லாமல் செல்லும் ஓட்டுனர்..

அடிபட்டவனக்கும்
அவன் வண்டிக்கும் இடையில்
புகுந்து செல்கின்றன
வாகனங்கள்..

Friday, March 6, 2009

நெய்தல் நினைவுகள்..

கரையில் கட்டிய
மணல் வீடு தான்
நான் கட்டியதிலேயே
அழகான வீடு..

இதே கடற்கரையில்
நான் உனக்கு அளிக்கும்
பதில்கள்..
என் அப்பா எனக்கு
மறுத்த பதில்கள்..

மணல் வீட்டில்
குழி தோண்டிய போது
முதலாய் அவள்
கை பிடித்தேன்..

சிதிலடைந்த அந்த
பாய்மர படகு
இன்று என்னை எனக்கே
ஞாபகப்படுத்துகிறது..

என் அப்பாவிடம் கைகுழத்தையாய்
இருந்தது முதல்
என் மகனிடம் கைத்தாங்கலாய்
இன்று வரை
இந்த கடற்கரையில்
நான் நடந்து வருகிறேன்..

கரைக்கு
கடல் ஒன்றே
அடையாளம்..

லட்சகணக்கான அடி ஆழமாம்
கடல்
கரையை தாண்டி வருவதில்லை
கடல் இல்லை
கரை தான்
அதிசயம்..

கரையில் ஒதுங்கியிருக்கும்
அந்தபந்து
சிறு வயதில் அடித்து சென்ற
என் நீல நிற பந்தையே
நினைவுபடுத்துகிறது..